யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் கோரிக்கை

0
58
யாழ் மாவட்டத்தில் படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் தலைமையகத்திற்கு இன்று (04) முற்பகல் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அவர்கள் யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு கோரிக்கையை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் அவர்களை கட்டளைத்தளபதி அவர்கள் வரவேற்றதுடன் யாழ் மாவட்டத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் நல்லிணக்க ரீதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆளுநர் அவர்களுக்கு விளக்கமளித்தார்.
மேலும், ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கமைவாக பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதையும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் படையினரால் பெருமளவிலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதை பாராட்டிய கௌரவ ஆளுநர் அவர்கள்  மேலதிகமாக தற்போது பாதுகாப்பு படையினரிடம் இருக்கும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பாதுகாப்பு கேந்திர ஸ்தானத்தில்  அக்காணிகள் இருக்கும் பட்சத்தில் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அவற்றிற்கு மாற்றீடான நடவடிக்கைகளை மேற்கொண்டு  யாழ் மாவட்டத்தில் காணப்படும் குறித்த காணிப்பிரச்சனைகளை விரைவில் முடிவிற்கு கொண்டுவருமாறும் ஆளுநர் அவர்கள் கட்டளைத்தளபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here