அரசின் விலைவாசி உயர்வு மக்களுக்கு எதிரான நடவடிக்கையே –   மு. சந்திரகுமார் கண்டனம்

0
107

நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத்தரம், சமூகப் பாதுகாப்பு,  நல்லெண்ணம், அரசியல் தீர்வு போன்றவைகளில் உயர்வை ஏற்படுத்த வேண்டிய நல்லாட்சி அரசாங்கம், அவற்றைச் செய்யாமல், விலைவாசியை மட்டும் உயர்த்திக் கொண்டிருக்கிறது. இதனால் வறிய, நடுத்தர சமூக அடுக்கு நிலையில் உள்ள மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக இலங்கைத்தீவில் வறுமையிலே மிகப் பாதிப்பைச் சந்தித்து, முதலிடத்தில் இருக்கின்ற கிளிநொச்சி மாவட்ட மக்களை இந்த விலைவாசி உயர்வு கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதனை சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தக் கண்டனத்தை வெளிப்படுத்தும் எதிர்ப்பு நடவடிக்கையை மக்கள் பங்கேற்புடன், எதிர்வரும் 21. 05. 2018 திங்கள்கிழமை அன்று நடத்துவதற்கு அது தீர்மானித்துள்ளது என அந்த அமைப்பின் ஸ்தாபகர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் “நாட்டிலே உற்பத்தித்துறையை ஊக்கப்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக, “எல்லாவற்றையும் இறக்குமதி செய்வது” என்ற தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவே இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மிகுந்த சிரமங்களின் மத்தியில் விவசாய, கடல்சார், பனை, தென்னைவள, சிறுதொழில் உற்பத்திகளில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த உற்பத்திகளுக்கான நியாய விலையையும் சந்தை வாய்ப்புகளையும் உருவாக்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளது. பதிலாக பெரும் நிறுவனங்களின் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பை முன்னுரிமைப்படுத்துகிறது. இந்த நடைமுறையையே நாடு முழுவதிலும் அரசாங்கம் பின்பற்றுகிறது. இது வளர்முக நாட்டைப் பாதிப்புக்குள்ளாக்கும் பொருளாதார நடவடிக்கையாகும்.

இந்தத் தவறான நடைமுறையினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை மறைக்கும் பொருட்டு மக்களின் நாளாந்த வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் விலைவாசி உயர்வை அதிகரிப்புச் செய்து கொண்டேயிருக்கிறது அரசாங்கம். இது மேலும் மேலும் பாதிப்புகளையே மக்களுக்கு உண்டாக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதைப் பற்றி, அதற்குப் பொருத்தமான பொருளாதாரக் கொள்கையை வகுப்பதைப்பற்றி அரசாங்கம் சிந்திக்கவில்லை. இதனால் இலங்கைத்தீவு இன்று கடன் சுமையில் மீள முடியாத அளவுக்குச் சிக்கியுள்ளது. மக்களும் தனிப்பட்ட ரீதியில் தொடர்கடன், பெருங்கடன் என மீள முடியாத கடனில் சிக்கியிருக்கிறார்கள். கடலால் சூழப்பட்டதை விடவும் கடன் சுமையினால் இலங்கைத்தீவு சூழப்பட்டுள்ளது என பொருளாதாரத்துறையினர் கவலை கொள்ளும் அளவுக்கு அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை தவறாக அமைந்துள்ளது. இதனாலேயே மக்களுக்கு தீராத வரிச்சுமையை அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் நாடும் மக்களும் மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்க வேண்டிய அபாய நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

எனவே போரினாலும் வறுமையினாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயம், கடற்தொழில், பனை தென்னை வள உற்பத்தி மற்றும் சிறுதொழில் செய்வோரை அதிகமாகக் கொண்ட கிளிநொச்சி மாவட்ட மக்கள் அரசாங்கத்தின் விலைவாசி உயர்வைக் கண்டித்தும் தமது உற்பத்திகளுக்கான சந்தை உத்தரவாதத்தைக் கோரியும் எதிர்வரும் 21.05.2018 அன்று கிளிநொச்சி நகரில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here